கிரிக்கெட் விளையாட்டில் புதிய சட்ட விதிமுறைகள்; விரைவில் அமுல்!

இந்த வருடத்தில் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகளை கிரிக்கெட் வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். இதில், உயரம் குறைந்த துடுப்புக்களைப் பயன்படுத்த முடியாது என்பது முக்கிய விதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறைந்த உயரம் கொண்ட துடுப்புக்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு மட்டுமே சார்பாக இருக்கும் என்றும் இதனால் பந்து வீச்சாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவார்கள் என்றும் குற்றச்சாட்டுக்கள் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், துடுப்புக்களின் அகலம் 108 மில்லி மீற்றருக்குள்ளும், அடர்த்தி 67 மில்லி மீற்றருக்குள்ளும் இருக்கவேண்டும் என்று புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், தேவைப்பட்டால் அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றவும், எதிரணிக்கு கூடுதல் ஓட்டங்களை வழங்கவும் நடுவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
நடுவரின் முடிவுக்கு எதிராகக் கூக்குரலிடுவது, எதிரணி வீரருடன் உடல் ரீதியான தாக்கங்களை விளைவிப்பது போன்ற குற்றங்களுக்காக, எதிரணியினருக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்படும் என்ற விதிமுறையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதால் புதிய தலைமுறை நடுவர்கள் பலரும் அந்தப் பதவியை விட்டே விலகிவிடுவதாலேயே நடுவர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்-பெண் வீர, வீராங்கனைகளைச் சுட்டும் வகையிலான பதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages