GSP+வரிச்சலுகைக்கும் மனிதஉரிமை தொடர்பிலான நிபந்தனைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
GSP+ வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு மீண்டும் வழங்குவதற்காக 5 நாட்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டது. அதற்கு எந்தவித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அரசாங்கம் முன்னெடுத்துள்ள மனித உரிமையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கை, நல்லாட்சி ,ஜனநாயகம் ,நிலைபேறான அபிவிருத்தி செயற்பாடுகளை கருத்திற்கொண்டே அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் GSP+ வரிச்சலுகையை மீண்டும் வழங்க முன்வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடனே அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கும் கூட்டு எதிர்க்கட்சியினரின் கடந்தகால ஆட்சியில் இந்த 3 விடயங்களும் இருந்ததா என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மனித உரிமைகள் குறித்த நிபந்தனைகளை நாம் விரிவாக ஆராய்ந்துள்ளோம் அவற்றை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஓரினச்சேர்க்கை தொடர்பான யோசனையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதினால் அதை நீக்குமாறு நாம் கோரியுள்ளோம். இன மத ரீதியிலான திருமண நடைமுறை நாட்டில் உண்டு என்று மனிதஉரிமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு நாம் விளக்கமளித்துள்ளோம். ஓரினச்சேர்க்கை தொடர்பான யோசனையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம். ஐரோப்பியாவில் சில நாடுகளும் இதனை எதிர்க்கின்றன என்றும் செய்தியாளரின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.

No comments:
Post a Comment