எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது. எந்தவொரு தேர்தலும் குறிப்பிட்ட தினத்திற்குள் நடத்தப்படாவிட்டால் அது ஜனநாயக விரோதச் செயலாகிவிடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
எந்தவொரு தேர்தலும், குறிப்பிட்ட தினத்திற்குள் நடத்தப்படாவிட்டால் அது ஜனநாயக விரோதச் செயல் என்பதை இதற்கு முன்னரும் உத்தியோபூர்வமாக நாம் கூறியுள்ளோம். ஜனநாயகத்திற்கு ஏற்படும் பாதிப்பினால் சர்வஜன வாக்குரிமை தொடர்பாக மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழந்துவிடும் அபாயமும் ஏற்படும். நாங்கள் அந்த சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுத்திருந்தோம்.
1981ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சம்பவங்களின் பின்னர் ஆங்கிலத்தில் பெலட் எனப்படும் வாக்குச் சீட்டு மக்களின் நம்பிக்கை இழப்பிற்குப் பின்னர்; புலட் என்று மாறியதால் ஏற்பட்ட விளைவுகளை நாங்கள் அறிவோம். அந்த சந்தர்ப்பம் ஏற்படாது என நம்புகிறோம், பிரார்த்திக்கின்றோம். ஜனநாயகம் மற்றும் வாக்குரிமை தொடர்பில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைவாகாது, அந்த நம்பிக்கை குறைவாகும்படி எவரும் செயற்படவும் மாட்டார்கள் என்று நம்புகிறோம்.
இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். ஜுன் மாதத்திற்கு முன்பாக அல்ல, ஒரு வருடத்திற்கு முன்பாக தேர்தல்களை நடத்த முடியாது. மே மாதம் வெசாக் தினத்திற்கு முன்பாக நடத்துவது குறித்து பிரச்சினை காணப்படுகிறது. ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஒன்றை நடத்துவதானது முடியாத காரியமாகும். தேர்தலை நடத்த 75 நாட்கள் எமக்கு அவசியமாகும். தொகுதிகள் தொடர்பில் எமக்கும் தெரியாது. எவ்வாறாயினும் அரசியலமைப்பு மாற்றம், தேர்தல்கள் முறைமை மாற்றம் என்பன எவை இடம்பெற்றாலும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடைபெறும் என்றார்.

No comments:
Post a Comment