அல்-கைதா தலைவர் ஒஸாமா பின் லேடன் குறித்து அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கொடுத்ததாக நம்பப்படும் பாகிஸ்தானிய மருத்துவரை விடுவிக்கவோ அல்லது அமெரிக்காவிடம் கையளிக்கவோ போவதில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
குறித்த மருத்துவரின் விடுதலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி ஊடகங்களில் பேசிவருவது குறித்து பாகிஸ்தான் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
பின் லேடனின் மரணத்தையடுத்து, பாகிஸ்தானின் மருத்துவரான ஷகீல் அஃப்ரிடி என்பவரை அமெரிக்க இராணுவம் பாராட்டியிருந்தது. அவரது உதவியுடனேயே பின் லேடனைக் கொல்ல முடிந்தது என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தது.
பின் லேடனின் மரணத்தின் பின், திடீரென ஷகீல் அஃப்ரிடி பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். மருத்துவ முகாம் என்ற பெயரில் பின் லேடனின் மரபணுவைத் தேடி பலரது இரத்த மாதிரிகளையும் பரிசோதித்து வந்தார் என்ற குற்றத்தின் பேரிலேயே ஷகீல் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், தான் பதவிக்கு வந்தால் ஷகீல் அஃப்ரிடியை இரண்டு நிமிடத்தில் விடுவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பலத்த கண்டனம் தெரிவித்திருந்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர், அஃப்ரிடியை எக்காரணம் கொண்டும் பாகிஸ்தான் விடுவிக்காது என்று தெரிவித்திருந்தது.

No comments:
Post a Comment