இன்றைய நவீன உலகில், அஃறிணைகளுக்கு கொடுக்கப்படுகின்ற மரியாதையும் இடமும் உயர்திணைக்கு வழங்கப்படுவது குறைவடைந்து செல்கின்றது. இந்த உலகத்தில் உள்ள அனைத்து வளங்களும் மனிதன் என்ற உயர்திணைக்காக படைக்கப்பட்டவையாக இருக்க, அந்த வளங்களுக்காக மனிதர்கள் இலக்குவைக்கப்படுகின்ற சம்பவங்களை வரலாற்றில் நாம் கண்டுவந்திருக்கின்றோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற தோரணையில் அல்லது அமைதியை நிலைநாட்டுதல் என்ற போர்வையில், எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்காகவும், வேறு அரசியல் மற்றும் இராணுவக் காரணங்களுக்காகவும் உலகின் பல பிராந்தியங்களில் தற்போதுவரை மனித உயிர்களை பலியெடுத்துக் கொண்டிருக்கின்ற யுத்த நடவடிக்கைகளில் பெரும்பாலானாவை இவ்வகை சார்ந்தவை என்றே மானிடவியலாளர்கள் நோக்குகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பரிகாரம் தேடாமல், இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அப்பாவி தமிழ் மக்களைப் பற்றி கவலைப்படாமல், காணாமல்போன பால்குடி மறவாத இரண்டு கொம்பன் யானைகளுக்காக பரிதாபப்பட்ட விலங்குநல செயற்பாட்டாளர்கள்... அழுத்கமை கலவரம்; உள்ளடங்கலாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை முறையாக விசாரித்து அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், நிலத்திற்கு கீழே இருக்கின்ற தொல்பொருள்களை பாதுகாக்க முனைகின்ற தேசியவாதிகள் என இன்னும் எத்தனையோ முரண்களான விடயங்களை கண்டுகொண்டிருக்கின்றோம். அவ்வாறே, வடபுலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு மீளக் குடியமர்ந்த முஸ்லிம்களின் நிம்மதியை விடவும் வனவளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதா என்ற யதார்த்தமான கேள்வி இன்று நமக்கு முன்னே எழுந்துநிற்கின்றது.
திடீர் அறிவிப்பு
இதற்கு உடனடிக் காரணம், சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் பெரும் எதிர்பார்ப்போடும் ஆட்சிபீடமேற்றப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விடுத்துள்ள அறிவிப்பு எனலாம். 2016 டிசம்பர் மாதம் 30ஆம் திகதி நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 'வில்பத்து தேசிய வனாந்தரத்தின் எல்லைகளை மேலும் விஸ்தரித்து வனவள வலயம் ஒன்றை பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு' உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றார். வில்பத்து சரணாலயத்துக்கு அருகிலுள்ள குறிப்பிட்டளவான நிலப்பரப்பையும் வனப்பரிபாலன திணைக்களத்தின் கீழ் கொண்டுவரும் வகையிலேயே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி, இயற்கை வளத்தை பாதுகாக்கும் நல்ல நோக்கத்திலேயே இவ்வறிப்பை விடுத்திருந்தாலும், வில்பத்துவில் இருந்து பல கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தில் முசலி போன்ற பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் அவர்களைப் பற்றி கவலைப்படுகின்ற ஏனைய மக்களுக்கும் இது மனதில் அச்சத்தை தோற்றுவித்திருக்கின்றது. இவ்விவகாரத்தை பல்வேறு அடிப்படையில் நோக்க வேண்டியுள்ளது. மீளக்குறியேறிய மக்கள் தொடர்பான மனிதாபிமானம், இயற்கை வளங்களை பாதுகாப்பதன் அவசியம், சட்ட ரீதியான அணுகுமுறை, இப்பிரதேசத்தில் அரசியல் பிரதிநிதியாக இருக்கின்ற மக்கள் காங்கிரஸ் தலைவரின் அரசியல் மற்றும் அவருக்கு எதிரான அரசியல், இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல் என்ற பல கோணங்களில் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.
வில்பத்து என்று நாம் பொதுவாக சொல்கின்ற நிலப்பரப்பு வில்பத்து தேசிய சரணாலயம் அல்லது பூங்கா உள்ளடங்கலாக பல்வேறு வனவள பிரதேசங்களை உள்ளக்கியுள்ளது. இந் நிலப்பரப்பு. புத்தளத்திற்கு வடக்காகவும் அனுராதபுரத்திற்கு வட மேற்காகவும் பரந்திருக்கின்றது. வில்லு எனம் சிறிய குளங்கள் உள்ளடங்கலாக பல்வேறு சிறப்பம்சங்களை வில்பத்து சரணாலயம் கொண்டிருக்கின்றது.
உண்மையிலேயே, பூகோளமயமாக்கல் சிந்தனையில் பக்க விளைவுகளால் உலகளாவிய ரீதியில் சூழலுக்கு ஏற்பட்டிருக்கின்ற சூழலியல் பாதிப்புக்கள் இலங்கையிலும் உணரப்பட்டு வருகின்றன. எனவே, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். ஜனாதிபதியும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரும் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தப் பொறுப்பு அதிகமாக இருக்கின்றது என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவும் 1938ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு தேசிய சரணாலயத்தையும் அங்குள்ள வனஜீவராசிகளையும் காப்பாற்றுவது இன்றியமையாதது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், வில்பத்துவை விஸ்தரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னதாக, அதனைச்சூழ மீளக் குடியமர்ந்துள்ள முஸ்லிம்கள் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.
இடம்பெயர் வாழ்வு
விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் விடயத்தில் இழைத்த மிகப் பெரிய கொடூரங்களில் முக்கியமானது வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையாகும். முஸ்லிம்களின் பார்வையில், விடுதலைப் போராட்டம் பயங்கர யுத்தமாக உணரப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக அதைக் கொள்ளலாம். குறுகிய காலஅவகாசத்தில், முசலி முஸ்லிம்கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட ஒரு இலட்சம் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதற்குப் பிறகு அகதி வாழ்க்கையே அவர்களின் விதி என்றாயிற்று.
இவ்வாறு இடம்பெயர்ந்த யாழ்குடாநாட்டின் முஸ்லிம்களில் பெருமளவானோர் இன்னும் மீளக் குடியேற்றப்படவில்லை என்பது தனிக்கதை. அதில் ஏகப்பட்ட தடைகளும் நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும், மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றனர். அவர்கள் குடியேறிய ஒரு சில இடங்களே வனப்பரிபாலன திணைக்களத்திற்கு உரியதென்றும் அதனை முஸ்லிம்கள் அளித்து விட்டதாகவும் அண்மைக்காலமாக கூப்பாடு போடப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையே முஸ்லிம்களின் அதிகாரத்தில் உள்ள ஒரேயொரு உள்ளளுராட்சி சபையாகும். முசலி பிரதேச சபையின் கீழ் முசலி, மறிச்சுக்கட்டி, சிலாவத்துறை, கரடிக்குழி, காயாக்குழி, பாலக்குழி, முள்ளிக்குளம் உள்ளடங்கலாக பல கிராமங்களில் முஸ்லிம்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வந்தனர். இங்கு வாழ்ந்த மக்களும் புலிகளால் முற்றாக வெளியேற்றப்பட்டு, பின்னர் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு மீள்குடியேறி இருக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பிறகு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் இம்மக்களின் மீள் குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது. வெளிநாட்டு உதவிகளைப் பெற்றே பெருமளவுக்கு அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த மஹிந்த அரசாங்கமே 2012 செப்டம்பர் 21ஆம் திகதியன்று ஒரு விஷேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. இதன்படி முஸ்லிம்களின் பூர்வீக நிலப்பரப்பில் ஒரு பகுதியும் வனபரிபாலன திணைக்களத்திற்குரிய நிலம் என பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால், 'வில்பத்து சரணாலயத்திற்குரிய பாதுகாக்கப்பட்ட காடுகளை அழித்து முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேற்றப்படுகின்றனர்' என்ற குற்றச்சாட்டை கடும்போக்கு சக்திகளும் சில சிங்கள ஊடகங்களும் முன்வைக்கத் தொடங்கின. இது பெரிய பூதாகரமாகியது. இனவாதிகள் இதை கையில் எடுத்தனர். வனவளத்தை பாதுகாத்தல் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கும் றிசாட்டுக்கும் எதிரான பிரசாரமாக இது உருவெடுத்தது. அச்சமயத்தில், எல்லா அதிகாரங்களையும் உச்சபட்சமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த அப்போதைய ஜனாதிபதி இவ்விடயத்தில் தலையிட்டார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் கருத்திற் கொண்டு, மீள்குடியேற்றத்திற்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டு அதன்படி இப்பகுதிகளில் மீள் குடியேற்றத்தை மேற்கொள்ள அவர் ஆவனம் செய்தார். ஆனாலும், முஸ்லிம்கள் காடுகளை அழிக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் அவ்வேளையிலும் ஓய்ந்திருக்கவில்லை.
காடாகிய ஊர்கள்
முசலி மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களில் 20 வருடங்களுக்கு மேலாக அவர்கள் வசிக்கவில்லை. அவர்கள் அகதிமுகாம்களில் இருந்த இக்காலப்பகுதியில் ஒவ்வொரு கிராமமும் காடாகிப் போனது மிகச் சாதாரணமான இயற்கையின் நடைமுறையே. ஆனால் அதற்காக அது முஸ்லிம்களின் பூர்வீகம் இல்லை என்றோ அது முஸ்லிம்களின் காணிகள் இல்லை என்றோ கூற இயலாது. முஸ்லிம்கள் இடம்பெயர்ந்திருந்த காலப்பகுதியில் அம்மக்கள் அறியாத விதத்தில் இரகசியமான முறையில் மேற்படி வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளனதாக அமைச்சர் றிசாட் கூறிவருகின்றார்.
அதுமட்டுமன்றி, களத்திற்கு விஜயம் செய்யாமல் கொழும்பில் இருந்தவாறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த வர்த்தமானிக்கான வரைபடம் வரையப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அவர், இங்கு தொடுகோடுகள் வரையப்பட்டுள்ள மூன்று புள்ளிகளுள் ஒன்று அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தமே இல்லாத ஒரு பிரதேசத்தை குறிப்பதாக இருக்கின்றது என்று கூறுகின்றார். இவர் கூறுவது சரியாக இருக்கும் பட்சத்தில், தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி தவறான முறையில் இவ்வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது ஒரு இரவில் இடம்பெற்ற களவு அல்ல. இனவாதத்திற்கு சார்பான போக்கை வெளிப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது அவர்களது ஒப்புதலுடன் பசிலின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஜனாதிபதி செயலணியின் ஊடாகவே முசலி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள் என்பதையும் அதற்கு அமையவே அரை ஏக்கர் காணி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது.
அரசியலில் ஊழலும் சட்ட வரண்முறை மீறல்களும் சர்வ சாதாரணமானது. ஒருவேளை, முசலி முஸ்லிம்கள் மீள்குடியேறிய சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்ஷவோ, றிசாட்டோ ஊழல் செய்திருந்தால் அல்லது சட்டவிரோதமாக காடுகளை அளித்து குடியேற்றியிருந்தால் அதற்கெதிராக சூழலியலாளர்களும் வனப்பரிபாலன திணைக்களமும் உடனேயே சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு சட்டத்தின் ஊடாக அதைச் செய்திருந்தால் அதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இருந்திருக்காது. ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்ட பிற்பாடு, இப்போது வந்து சட்டம் பேசுவது எந்த வகையில் நியாயம் எனத் தெரியவில்லை.
யார் குற்றவாளிகள்?
அமைச்சர் றிசாட் பதியுதீனின் தனிப்பட்ட அரசியல் வேறு, வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது வேறு. இன்று பலராலும் முன்வைக்கப்படுவதைப் போல றிசாட் வடக்கு மீள்குடியேற்றத்துடன் தொடர்புட்ட நடவடிக்கைகளில் எங்கேனும் ஊழல் செய்திருந்தால் அவருக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் வழக்குத் தொடரலாம், அவரை விசாரிக்கலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேபோன்று இம்மக்கள் சட்டத்திற்கு முரணாக காடுகளை அழித்தே குடியேறி இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஏழெட்டு கிராமங்களும் எப்படி திடீரென மாயமாகிவிட்டன என்பதைச் சொல்லி விட்டு, இனவாதிகள் தம்முடைய நிலைப்பாட்டை நிரூபிக்கவும் முனையலாம்.
ஆனபோதும், தனிப்பட்ட ஊழல் நிரூபிக்கப்பட்டால் றிசாட் அதற்கு முகம் கொடுக்க நேரிடும் என்றாலும், 'முசலியில் ஒட்டுமொத்த மீள்குடியேற்றமும் சட்டரீதியற்றது' என்ற தீர்ப்பு வந்தால் முன்னைய ஆட்சியாளர்கள் தொடக்கம், ஜனாதிபதி செயலணி வரை எல்லோருமே குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள், அப்போதை வனபரிபாலன திணைக்கள உயரதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர், முப்படை அதிகாரிகள், கணக்கெடுடுப்பு நடத்தியோர் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளடங்கலாக நூற்றுக்கு மேற்பட்டோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குறிப்பாக தமது வேலையைச் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இன்று சட்டம் பேசும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கபட நேரலாம்.
றிசாட் ஊழல் செய்திருக்கின்றார் என்பதற்காகவோ மீள்குடியேற்றம் சட்டரீதியாக மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலோ அங்கு வாழையடிவாழையாக வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்க இடமளிக்க முடியாது என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது. 2012இல் வர்த்தமானி அறிவித்தல் வெளியாக முன்னமே அந்த மக்கள் முசலி மற்றும் அண்டிய பிரதேசங்களில் வாழ்ந்திருக்கின்றார்கள், மஹிந்த ஆட்சியின் பூரண ஒப்புதலுடன் ஜனாதிபதி செயலணி ஊடகவே மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக உரிய தரப்பின் அனுமதியுடனேயே கொண்டச்சி போன்ற இடங்களிலும் காடுகள் வெட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இப்படியிருக்கையில், இம்மக்களை சட்டவிரோத குடியேறிகள் போல பார்ப்பது குறுகிய மனப்பான்மையாகும்.
அச்சப்படும் மக்கள்
இந்நிலையில், வில்பத்து எல்லைகளை விஸ்தரித்து வில்பத்து வனவள வலயத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நாட்டின் ஜனாதிபதியே அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றமை வடபுல முஸ்லிம்களை கவலை கொள்ளச் செய்திருக்கின்றது. உண்மையிலேயே வில்பத்து சரணாலய எல்லையில் இருந்து பல கிலோமீற்றர் தொலைவிலேயே முஸ்லிம் கிராமங்கள் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறிருப்பினும், முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு மேலதிகமாக, இப்போது வில்பத்து எல்லைகளையும் விஸ்தரிக்க முனைவது மேற்படி மீள் குடியேற்றக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு ஆபத்தானதாக அமையும் என்று கூறப்படுகின்றது.
எல்லைகளை எவ்வளவு தூரத்திற்கு விஸ்தரிப்பது என்ற முன்னறிவிப்பு செய்யப்படாத நிலையில், மக்கள் குடியிருப்பு நிலங்களை நோக்கி பரந்தளவில் விஸ்தரிக்கப்படுமாயின் குறிப்பாக மறிச்சுக்கட்டி, கரடிக்குளம் போன்ற பிரதேச மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விடயமறிந்தவர்கள் கூறுகின்றார்கள். வேறு இடங்களில் அம்மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான யோசனை அரசாங்கத்திடம் இருக்கின்றது என்றாலும், யாழ்ப்பாண முஸ்லிம்களும், அளக்கட்டு பிரதேச கிறிஸ்தவர்களும் இன்னும் முழுமையாக மீள்குடியேற்றப்படாதிருக்கும் இன்றைய சூழலில், ஏற்கனவே மீள்குடியேறிய மக்களை இன்னுமொரு இடத்திற்கு நகர்த்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் மிகக் குறைவாகும்.
எனவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் காத்திரமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். வர்த்தமானி அறிவித்தல் என்பது ஒரு சட்ட ரீதியான ஆவணம் என்பதால், சட்ட ரீதியாக நியாயத்தை பெற்றுக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும். அத்துடன் இயற்கை வளத்தை பாதுகாப்பதில் தமக்கிருக்கின்ற பொறுப்பை அனைத்து முஸ்லிம்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்.
இதேவேளை, 'அம்பாந்தோட்டையில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு முதலீட்டு வலயம் உருவாக்கப்படுவதை மறைப்பதற்காகவே வில்பத்து விவகாரம் தூக்கிப்பிடிக்கப்படுவதாக' கூட்டு எதிர்க்கட்சி எம்.பி.ஒருவர் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முனைகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, 'வில்பத்துவுக்கு அருகில் முஸ்லிம்கள் காடுகளை அழித்து சட்டவிரோதமாக குடியேறவில்லை. எமது அரசாங்கத்தின் கீழ் அவர்களது சொந்த நிலங்களிலேயே குடியேற்றினோம்' என்று கூறியுள்ளார். அரசியலில் இதுவெல்லாம் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதை தற்;போதைய ஆட்சியாளர்கள் அறியாதவர்களல்லர்.
எனவே அரசாங்கம் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும். இந்த மக்களின் விடயத்தில் றிசாட் பதியுதினோ முன்னைய ஆட்சியாளர்களோ தவறிழைத்திருந்தால் அதனை நிரூபித்து தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து அதற்கான தண்டனையை அப்பாவி பொதுமக்களுக்கு வழங்க முடியாது. வில்பத்து வனவளத்தையும் ஜீவராசிகளையும் விட வடபுல முஸ்லிம் ஜீவன்களை குறைத்து மதிப்பிட முடியாது.
ஏ.எல்.நிப்றாஸ்
(வீரகேசரி 15.01.2017)

No comments:
Post a Comment