நல்லாட்சி அரசை வீழ்த்தப்போகும் மூன்று காரணிகள்

 – அஷ்கர் தஸ்லீம் –
இந்த நாட்டில் இப்போது அன்றாடம் நடக்கும் விடயங்களைப் பார்க்கும்போது, கிட்டிய எதிர்காலத்தில் நாடு மொத்தமாகவே குழம்பி விடுமோ என்ற அச்சம் உருவாகி வருவதை உணரக்கூடியதாக உள்ளது. ராஜபக்ஷவினரின் ஆட்சியின் அஸ்தமனம் ஆரம்பித்தபோது உணரப்பட்ட கூதூகலத்துக்கு மாற்றமான உணர்வு இப்போது மேலிட்டு வருவது உணரப்படுகின்றது.
நல்லாட்சி என்று சொல்லிக்கொள்ளும் அரசு கிட்டிய எதிர்காலத்தில் வீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தை உறுதிப்படுத்தும் முக்கிய மூன்று காரணிகள் உள்ளன.
அவையாவன முதலாவது, ஆளும் கூட்டணியிலுள்ள பிரதான கட்சிகளாக ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வலுத்து வருகின்ற பணிப் போர். இரண்டாவது, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள். மூன்றாவது, அரசியலமைப்பு குறித்த சர்ச்சைகள் என்பனவாகும்.
இந்த சர்ச்சைகளும், பதட்டங்களும் தொடர்ந்தால், நல்லாட்சி அரசு எனச் சொல்லிக்கொள்ளும் இந்த அரசு ஸ்திரத்தன்மையை இழந்து, கிட்டிய எதிர்காலத்திலேயே உடைந்துபோகும் அல்லது அது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று எதிர்வுகூற முடியுமாயுள்ளது.
  1. ஐ.தே.க. – சு.க. பணிப்போர்
நவீன இலங்கை வரலாற்றில் மாபெரும் ஊழல் பெருச்சாலிகளாகவும், சட்டத்துக்கு புறம்பான அக்கிரமங்களுக்குப் பெயர் பெற்றவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற ராஜபக்ஷவினரையும், அவர்களது குடும்ப ஆட்சியையும் முடிவுக்குக்கொண்டு வருவதற்காக, இந்த நாட்டின் சிவில் சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதே காலப் பகுதிலேயே, இன்னும் இரண்டு வருட ஆட்சிக் காலம் இருந்த நிலையில், மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றார். இச்சந்தர்ப்பத்தில், மகிந்த ராஜபக்ஷவுக்குப் போட்டியாக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது புத்திசாதுர்யமாக இருக்கவில்லை.
அந்த நேரத்திலேயே, சு.க.வின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன களத்துக்கு வந்தார். மகிந்த ராஜபக்ஷவுக்கு போட்டியாக, பொது வேட்பாளராக அவர்க களமிறக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஐ.தே.கவும் சிவில் சமூக இயக்கங்களும் களமிறங்கின. ஜே.வி.பியும்கூட மறைமுகமாக மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவு வழங்கியது.
இந்த நாட்டின் இரு சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம்களின் மிக மிகப் பெரும்பான்மையான வாக்குகளுடனும், சிங்களவர்களின் வாக்குகளுடனும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். பின்னர், நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், ஐ.தே.க. வெற்றிபெற்றதோடு, சு.க.வின் மைத்திரி அணியுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்கப்பட்டது.
இந்தக் கூட்டாட்சி வெளித்தோற்றத்தில் மிகவும் சுமுகமாகத் தென்பட்டாலும், இப்போது ஐ.தே.கவுக்கும், சு.கவின் மைத்திரி அணிக்கும் இடையில் பணிப்போர் நிகழ்ந்து வருவது அவதானிக்கப்படுகின்றது. அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும்போது, சு.க. ஆட்சியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மைத்திரி அணியும், ஐ.தே.க. ஆட்சியமைக்க வேண்டும் என்று ஐ.தே.கவும் மறைமுகமாக திட்டமிட்டு வருகின்றன.
இலங்கையின் அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கையில், ஐ.தே.க. எப்போதும் மேற்கு சார்பான தாராண்மைவாத போக்கைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதேநேரம், சு.க. சிங்கள தேசியவாத போக்கு கொண்ட கட்சியாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
ஐ.தே.கவின் ஒவ்வொரு நகர்வுகளும் சர்வதேச சமூகம் எனச் சொல்லிக்கொள்ளும் மேற்குலகத்தை திருப்திப்படுத்துவனவாகவே அமைகின்றன. அதேநேரம், சு.கவின் ஒவ்வொரு நகர்வுகளும் சிங்கள தேசியவாதத்துக்கு சார்பானதாகவும், தீவிர சிங்கள தேசியவாதிகளை திருப்திப்படுத்துவனவாகவுமே இருக்கும்.
மேற்குலகின் எதிர்பார்ப்புக்களும், அபிலாசைகளும் ஒரு திசையில் பயணிக்க, சிங்கள தேசியவாதத்தின் எதிர்பார்ப்புக்களும், அபிலாசைகளும் இன்னுமொரு திசையில் பயணிக்கின்றன. எனவே, இந்த இரு போக்குகளுக்கும் இடையிலான முரண்பாடும் இங்கு ஒரு சிக்கலாக உருவெடுத்துள்ளது.
நாம் இங்கு குறிப்பிட்ட, அடுத்து ஆட்சியமைப்பது யார் என்ற விடயமும், இரு கட்சிகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியாக நிலவி வருகின்ற சிந்தனைப்போக்கு முரண்பாடும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பணிப்போரை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தப் பணிப்போர் தொடருமேயானால், கூட்டாட்சி வெகு சீக்கிரமே உடைந்துபோகும் அபாயம் உருவாகும்.
  1. முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் நடவடிக்கைகள்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வெறுப்பு பிரசாரங்களின் பின்னால் இரு காரணிகள் தொழிற்படுவதை அவதானிக்கலாம். முதலாவது, சர்வதேச இஸ்லாமிய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல். இரண்டாவது, உள்நாட்டில் உள்ள பேரினவாத இயக்கங்களின் இஸ்லாமிய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல்.
பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய, மஹசொன் பலகாய போன்ற இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களின்போது, இஸ்லாத்துக்கு எதிரான நிகழ்ச்சிநிரலுடன் செயற்படுகின்ற சர்வதேச இயக்கங்களதும், நபர்களும் பயன்படுத்துகின்ற இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களையே பயன்படுத்திக் கொள்கின்றன.
தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின்போது…
அதேநேரம், ராஜபக்ஷவினரின் காலத்தில், சிங்கள் பௌத்த பேரினவாத இயக்கங்களுக்கு ராஜபக்ஷவினரின் ஆசிர்வாதம் தாராளமாகக் கிடைத்தது. சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ஷவினரின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக பேரினவாத இயக்கங்கள் மிகவும் சூட்சமாகப் பயன்படுத்தப்பட்டன. ராஜபக்ஷவினரின் ஆட்சியின்போது தர்கா நகர் முஸ்லிம்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்பட்டு 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு மில்லியன் கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன.
இந்த கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியவாத இயக்கங்களுக்கு ராஜபக்ஷவினர் ஆதரவு வழங்கி, ஆசிர்வதமை பகிரங்க இரகசியமாகும். ராஜபக்ஷ குடும்பத்தினர் மட்டுமன்றி, ராஜபக்ஷவின் அல்லக்கைகளாக செயற்பட்டவர்களும் இவர்களுக்கு பல்வேறு வகையிலும் ஆதரவு வழங்கியிருந்தனர். விமல் வீரவன்ச இதில் முக்கியமான ஒருவர்.
இந்த நாடு எதிர்கொண்ட 30 வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், சிலரின் அரசியல் இலாபங்களுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட இன, மத முரண்பாடு, குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான தீவிர சிங்கள பௌத்த இயக்கங்களது வெறுப்பு பிரசாரங்கள், ராஜபக்ஷவினரின் வீழ்ச்சியோடு மௌனமடைந்திருந்தது.
எவ்வாறாயினும், நல்லாட்சி அரசின் வருகையுடன் தீவிர சிங்கள பௌத்த தேசியவாத இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை அடக்கியிருந்தபோதும், இப்போது அவர்கள் மீண்டும் களத்துக்கு வந்துள்ளனர். நல்லாட்சி அரசில் உள்ள சில முக்கியமானவர்களின் கருத்துக்களும், செயற்பாடுகளும் இவர்களுக்கு உந்து சக்தியாக அமைந்தள்ளமை அவதானிக்கப்படுகின்றது.
இன்னுமொரு புறத்தில், இந்த அரசாங்கத்திலுள்ள சில தரப்பினர் ஞானசார தேரர் உள்ளிட்ட சிங்கள பௌத்த தேசியவாத குழுக்களை, திரை மறைவிலுள்ள சிலரின் நலனுக்காக, மீண்டும் களத்துக்கு கொண்டுவந்துள்ளனரா என்ற சந்தேகமும் பலமாக எழுந்துள்ளது.
கூட்டணி அரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் வலுத்து வரும் பணிப்போர், கூட்டு எதிரணியின் எச்சரிக்கைள் என்று பல்வேறு விடயங்கள், இந்த கடும்போக்கு குழுக்களின் மீள் எழுச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கின்றனவா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளதாகவே தோன்றுகின்றது.
சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ள முடியாது என்ற சிந்தனை காரணமாக, இந்த பேரினவாத இயக்கங்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எடுப்பதாக இல்லை என்றே தெரிகின்றது.
பொதுபலசேனாவின் ஞானசார தேரர், மிகவும் ஆவேசமாக பேசி, ஏனைய மதத்தவரின் உள்ளங்களை புண்படுத்தி, ஏனைய மதங்கள் மீதான வெறுப்பை கக்குகின்றவர். அன்று அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடனான சந்திப்பின் பின்னர் மிகவும் சாந்தமான முறையில் ஊடகங்களை விளித்து, எல்லா பிரச்சினைகளையும் கலந்துரையாடல் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு சில தினங்களுக்குப் பின்னர், ஊடகவிலாயளர் சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த அவர், அல்லாஹ்வை மிக மோசமாக நிந்தித்திருந்தார். எந்தவொரு மனிதனும் பயன்படுத்த விரும்பாத மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, அல்லாஹ்வை நிந்தித்து, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தினார்.
இந்த சம்பவத்துக்கு எதிராக பல தரப்பினரும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தபோதும், அந்த முறைப்பாடுகளின்படி, எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாதாரண பொதுமகன் முதல் அரசியல்வாதிகள், அமைச்சரவை அமைச்சர்கள் என்று பல்வேறு தரப்பினரும் முறைப்பாடு செய்திருந்தபோதும், ஞானசார தேரர் இன்னும் சுதந்திரமாக உலா வருகிறார்.
இந்த அரசை அதிகாரத்துக்கு கொண்டுவருவதில் சிறுபான்மையினங்கள் மிக மிகப் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தன. இந்த அரசும் சிறுபான்மையினங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்காது போனால், அடுத்த தேர்தலில் நிச்சயமாக சிறுபான்மையினங்கள் இந்த அரசுக்கு ஒருபோதும் வாக்காளிக்காது.
பாராளுமன்றத்திலுள்ள 21 முஸ்லிம் எம்.பிக்களும் எதிரணியில் அமர வேண்டும் என்று கூறுமளவுக்கு, முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சிவில் அமைப்புக்களும், இந்த முடிவை எடுக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் மீது அழுத்தம் வழங்கும் நிலையும் மிக அண்மையிலேயே உருவாகலாம்.
எனவே, நல்லாட்சி அரசு என்று சொல்லிக்கொள்கின்ற இந்த அரசும், முன்னாள் அரசு போன்று பேரினவாதிகளுக்கு எதிராக சட்டத்தை நிலைநிறுத்தாதுபோனால், முன்னாள் அரசுக்கு நடந்ததுபோன்று, இந்த அரசும் அடுத்த தடவை வீட்டுக்குச் செல்லும் நிலை உருவாகலாம் என்று அனுமானிக்க முடியும்.
  1. அரசியலமைப்பு சீர்திருத்தம்
இந்த அரசு அதிகாரத்துக்கு வருமுன்னர், மக்களுக்கு சில வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. முன்னாள் அரசின் ஊழல்களை விசாரித்து, அவற்றை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், இந்த நாட்டுக்கு பொருத்தமான ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதும் அவற்றில் முக்கியமான இரு வாக்குறுதிகளாகும்.
இந்த அரசு வாக்களித்தது போன்று புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. அரசியலமைப்பு உப குழுக்கள் தற்போது அவற்றின் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகள் குறித்த கலந்துரையாடல்கள் தற்போது சிவில் சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த புதிய அரசியலமைப்பு குறித்து சிறுபான்மை தரப்பிலிருந்து பல நேர்மறையயான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றபோதும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், அது இந்த நாட்டின் சிறுபான்மையினங்களுக்கு மத்தியில் ஒரு பாரிய பிரச்சினையை உருவாக்கி விடும்.
அதாவது, இலங்கையில் அதிகாரப் பகிர்வு உறுதிப்படுத்தப்பட்டு, அதேநேரம், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டால், கிழக்கில் மாத்திரமே பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு, அதிகாரப் பகிர்வின் எந்தவொரு பிரதிபலனையும் பெற்றுக்கொள்ள முடியாது போகும்.
இவ்வாறான நிலையில், பெரும்பான்மையிடமும், பெரும்பான்மைக்கு அடுத்த இடத்திலுள்ள தமிழ் சிறுபான்மையிடமும் முஸ்லிம்கள் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உருவாகும். இந்த நிலை ஏற்படுவதை முஸ்லிம் அரசியல் தரப்புக்களும், முஸ்லிம் பொது மக்களும் விரும்புவதில்லை.
எனவே, புதிய அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தி வடக்கு கிழக்கு மாகணங்களை இணைப்பதாக முடிவெடுத்தால், முஸ்லிம்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கும் அபாயம் உள்ளது.
அத்தோடு, அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவது குறித்து பெரும்பான்மை சமூகத்திடம் எந்தவொரு நேர்மறையான கருத்தும் இல்லை. சில நாட்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ஷவும் புதிய அரசியலமைப்பு உபகுழுக்களின் அறிக்கைகள் குறித்த தனது நிலைப்பாட்டை எழுத்து வடிவில் தெளிவுபடுத்தியிருந்தார்.
புதிய அரசியலமைப்பு உபகுழுக்களின் அறிக்கையுள்ள பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமானால், இந்த நாட்டின் ஒற்றைத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்று மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன மாகாணங்களுக்கு வழங்கப்பட்டு, சிங்கள மொழியோடு சேர்த்து தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டால், இந்த நாட்டின் ஒற்றைத்தன்மைக்கு பங்கம் ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, பெரும்பான்மை சிங்கள மக்கள் புதிய அரசியலமைப்பின் இந்த கூறுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலை அவர்களிடம் இல்லை. எனவே, புதிய அரசியலமைப்புக்கான ஆதரவு பெரும்பான்மை மக்களிடம் இல்லாதுபோனல், அதுவும் இந்த அரசு எதிர்கொள்ளும் பெரும் தோல்வியாகி விடும்.
முடிவாக
இந்த மூன்று விவகாரங்களும் விட்டுக்கொடுப்புடனும், வெளிப்படைத் தன்மையுடனும், தூரநோக்குடனும் அணுகப்பட்டால், கிட்டிய எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியிலிருந்து நல்லாட்சி என சொல்லிக்கொள்ளும் இந்த அரசு தப்பித்துக் கொள்ளலாம்.
ராஜபக்ஷவினர் என்ற ஊழல் பெருச்சாலிகளிடமிருந்து மீட்டெடுத்த இந்த நாட்டை, மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் வரலாற்றுத் தவறை எவரும் இழைக்கக்கூடாது.

தற்போதைய அரசை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு பங்களித்த அனைத்து அரசியல் மற்றும் சிவில் சக்திகள், ஒரு மேசைக்கு வந்து, இப்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான், நல்லாட்சி என சொல்லிக்கொள்ளும் இந்த அரசை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றலாம்.

No comments:

Post a Comment

Pages