நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களை குடியேற்றுவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அரசினால் உருவாக்கப்பட்ட விஷேட செயலணியின் செயற்பாட்டுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலேயுள்ள வடமாகாண சபை தடை போடுகின்றது. இந்த மாகாண சபை வடக்கு முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடாத்துகின்றது. அவர்கள் உதவுகின்றார்களுமில்லை, உதவி செய்பவர்களை அனுமதிக்கின்றார்களுமில்லை. நீங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு எங்களின் மனக்குறைகளையும் கவலைகளையும் எடுத்துரைக்க வேண்டும்.
போரின் காரணமாக அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கோ உடமைகளுக்கோ இற்றவரை அரசாங்கம் எந்த நஷ்ட ஈடும் வழங்கவுமில்லை, அவற்றை மீளக்கட்டிக்கொடுக்கவுமில்லை எனவும் அமைச்சர் தனது வேதனையை இந்த சந்திப்பில் வெளிப்படுத்தினார்.
வடக்கு – கிழக்கை இணைப்பதற்கும் எமது கட்சி ஒரு போதும் இடமளிக்காது. பொதுவாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் வடக்கு – கிழக்கு இப்போது இருப்பது போன்றே தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர். கடந்த கால அனுபவங்களில் இருந்து இந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் அதுவே தங்களுக்கு பாதுகாப்பு எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
இது மட்டுமன்றி இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு பல்வேறு அக்கிரமங்களும் அநியாயங்களும் இழைக்கப்பட்டன. தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. அழுத்கமையில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான பெறுமதியான சொத்துக்கள் எரிக்கப்பட்டன. உயிர்கள் பலி கொள்ளப்பட்டன. இனவாதிகளால் இழைக்கப்பட்ட இந்த கொடூரங்களுக்கு இற்றைவரை எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை.
யுத்த காலத்தில் காத்தான்குடி, பொலநறுவை பள்ளிகளில் தொழுது கொண்டிருந்தோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு சிறுபான்மையிலும் சிறுபான்மையாக வாழும் சமூகத்திற்கு இரண்டு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளாலும், இனவாதிகளாலும் கொடூரங்களே இழைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே கடந்த கால வரலாறு.
கிழக்கிலே முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகள் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அம்பாறை நுரைச்சோலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் அந்த மக்களை வாழவிடாது இனவாதிகள் தடை போட்டுள்ளனர். இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநியாயங்களை நீங்கள் உள்வாங்கி ஜெனீவா,, மற்றும் இலங்கை அரசுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கையிலே அதனையும் சுட்டிக்காட்ட வேண்டும். அதன் மூலம் எமக்கு விமோசனம் கிடைக்க உதவுவீர்களென நாம் நம்புகின்றோம்.
அத்துடன் புதிய அரசியல் யாப்பு, தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றிலும் எமது சமூகத்திற்கு அநீதி இழைக்க இடமளிக்க வேண்டாமென நீங்கள் உங்கள் முன்மொழிவில் உணர்த்த வேண்டும்.
எல்லை நிர்ணயம், எல்லை மீளாய்வு தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவடையக்கூடிய நியாயமான அச்சம் எமக்கு இருக்கின்றது.
சிறுபான்மையினர் செறிந்து வாழும் சில பிரதேசங்களைத் துண்டாக்கி அதனை பெரும்பான்மை பிரதேசங்களுடன் இணைக்கும் முயற்சிகளுக்கு ஊக்குவிக்க வேண்டாமென்ற விடயத்தையும் உங்கள் சிபாரிசில் நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதன் மூலமே உண்மையான நல்லெண்ணத்தையும் சக வாழ்வையும் மேற்கொள்ள முடியும் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
முஸ்லிம்கள் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் கூறிய விடயங்களை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த விஷேட அறிக்கையாளர் ரீட்டா தெரிவித்ததாவது,
அண்மைய நாட்களில் தான் பல்வேறு முஸ்லிம் தரப்பினருடனும் சந்திப்பை ஏற்படுத்தியதாகவும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தற்போது முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தனது அறிக்கையில் இந்த விடயங்கள் நிச்சயமாக இடம்பெறுமெனவும் அவர் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ் சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம் எச் எம் நவவி, அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், சிரேஷ்ட சட்டத்தரணிகளான, என் எம் ஷஹீட், ருஷ்தி ஹபீப், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், முன்னாள் பிரதியமைச்சர் ஹுசைன் பைலா, கலாநிதி மரைக்கார் ரியாஸ் சாலி, அலிகான் சரீப் ஆகியோர் பங்கேற்றனர்.
சுஐப் எம் காசிம்


No comments:
Post a Comment