ஷரீஆ தண்டனையை இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது – ACJU !!!
இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் மற்றும் தண்டனை முறைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது இஸ்லாமிய ஆட்சியோ, ஆட்சியாளனின் பிரதிநிதியோ இல்லாதபோது ஷரீஅத் ஆகாதென்று பத்வா குழுவின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.ஹாரிஸ் ரஷாதி தெரிவித்தார்.
புத்தளம் நல்லன்தலுவ ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பெண்ணொருவருக்கு 100 தென்னை மட்டையடி அடித்தது தொடர்பாக இஸ்லாம் மற்றும் ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடு பற்றி கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடொன்றில் இஸ்லாமிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் இஸ்லாமிய அரசோ, அரசின் பிரதிநிதியோ இருந்தால் மட்டுமே அது சட்டமாகும் என்றும் இலங்கையில் அவ்வாறு இல்லாத காரணத்தினால் எந்தவொரு மஸ்ஜித் நிர்வாகமும் இவ்வாறு செய்ய முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியும் இல்லை. ஆட்சியாளரின் பிரதிநிதியும் இங்கு இல்லை. அவ்வாறு இருக்கும்போது இஸ்லாமிய தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட முடியாது. அவ்வாறு நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத்தின் நிலைப்பாட்டின்படி சட்டமாகாது.
இவ்வாறு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பாதிக்கப்படுபவர்கள் காயப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ இந்நாட்டின் சட்டப்படியே அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும்.
இலங்கையில் மஸ்ஸித் தலைவருக்கோ, நிர்வாகத்துக்கோ, ஊர் தலைவருக்கோ இஸ்லாமிய தண்டனை முறையை, ஹத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment