சிலாவத்துறை கடற்படை முன்பாக முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சிலாவத்துறையில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் கணிகளை நில அளவைத் திணைக்களத்தினால் அளவீடு செய்யும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பபடவிருந்ததை எதிர்த்து முசலிப் பிரதேச மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அப்பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள சுமார் 34 ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள காணியை விடுவித்து மிகுதிக் காணியை கடற்படையினர் சுவீகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே இன்று மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர்.
காணி அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்கள அதிகாரிகளின் வாகனத்தை கடற்படை முகாமுக்குள் செல்ல விடாமல் மக்கள் வாகனத்தின் முன் வீதியில் படுத்துக் கொண்டனர்.
சிலாவத்துறை பொலிசாரும் கடற்படை அதிகாரிகளும் சில நிமிட நேரங்கள் மக்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் போராட்டத்தையடுத்து சிலாவத்துறை பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் சிலாவத்துறை கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் மூலம் எழுத்து மூல எதிர்ப்பு ஆவணத்தைப் பெற்றுக் கொண்ட நில அளவைத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் காணி அளவீடு செய்வதை இடைநிறுத்தி திரும்பிச் சென்றனர்.
பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சிலாவத்துறை வர்த்தக சங்கம், சிலாவத்துறை ஆட்டோச் சங்கம், சிலாவத்துறை கிராம அபிவிருத்திச் சங்கம், சிலாவத்துறை பள்ளிவாசல் பரிபாலன சபை, முசலி பிரஜைகள் ஒன்றியம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து சங்கங்களுக்கும் தனியாட்களுக்கும் சிலாவத்துறை மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.






No comments:

Post a Comment

Pages