வேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையினை நிறைவுசெய்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
பட்டதாரிகளின் தொழில் உரிமையினை உறுதி செய், பட்டதாரிகள் பட்டம்பெற்றது வீதியில் சத்தியாக்கிரகம் செய்வதற்கா, நல்லாட்சி என்பது நஞ்சி ஊட்டும் ஆட்சியா, ஆட்சி மாற்றத்தினால் பட்டதாரிகளுக்கு கிடைத்து என்ன, நடுவீதியில் பட்டதாரிகள் மாளிகையில் அரசியல்வாதிகள் போன்ற பதாகைகளையும் ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.
பட்டதாரிகள் வீதியில் போராடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment