உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய அறிக்கை மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் அசோக்க பீரிஸினால் கடந்த 17 ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் புதிய முறைப்படி நடத்த இருப்பதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் புதிய முறைமையில் உள்ள குறைபாடுகள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளாமலும், எல்லை நிர்ணய குழுவினரின் அறிக்கையில் தேவையான சட்டத்திருத்தங்களை செய்யாமலும் அவசரமாக வர்த்தமானியில் பிரசுரிப்பது சிறுபான்மையினருக்கும், சிறிய கட்சிகளுக்கும் செய்கின்ற அநீதியாகும் என்று சிறுபான்மையினக் கட்சிகளும், சிறிய கட்சிகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை நடத்துவதற்கு மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர் பைஸர் முஸ்தபா அடிக்கடி திகதிகளை குறிப்பிட்டுக் கொண்டே வந்தாரேயன்றி தீர்க்கமான அறிவிப்பைச் செய்யவில்லை. உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை வட்டார அடிப்படையில் புதிய தேர்தல் முறை ஒன்றின் மூலமாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வந்தமையே தேர்தலை நடத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டதற்கு காரணமென்று தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளினாலேயே உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு காலதாமதங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமாகும்.
இதேவேளை, உள்ளூராட்சி தேர்தலை புதிய முறைப்படி நடத்துவதற்கு எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டு வட்டாரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வட்டார எல்லை பிரிப்பு கடந்த அரசாங்கத்தின் காலத்திற் மேற்கொள்ளப்பட்டதாகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை இலக்காகக் கொண்டே வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே வேளை, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில்தான் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மைக் கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். ஆயினும், இவரின் இந்த கோரிக்கையை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.
சிறுபான்மைச் சமூகங்களும், சிறிய கட்சிகளும் பாதிக்கப்படுகின்ற வகையில் எல்லை நிர்ணயங்கள் அமைந்துள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் கண்டு விட்டுத்தான் வர்த்தமானியில் அது பிரசுரிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கனவே 56 இடங்களில் திருத்தங்கள் அவசியமென்று விதந்துரைகளைச் செய்திருக்கின்றார். மேலும், நாங்களும் தெரிவு முறையில் காணப்படக்கூடிய பாரிய பாதிப்புகள் பற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம். எனவே, சிறுபான்மையின கட்சிகளோடும், சிறிய கட்சிகளோடும், ஏனைய கட்சித் தலைவர்களோடும் போதிய கலந்துரையாடலை மேற்கொண்டு ஒருமித்த நிலைப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இதுபற்றிய தீர்க்கமான முடிவை எடுப்பதுதான் சிறந்ததாகும் என்று ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை புதிய முறைப்படி நடத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது. அமைச்சரவையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் உட்பட தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளார்கள். புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதற்குரிய அங்கிகாரத்தை வழங்குவதற்கு முன்னதாக அதிலுள்ள குறைபாடுகளை இல்லாமல் செய்வதற்குரிய அழுத்தங்களை கொடுத்திருக்க வேண்டும். தாங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே அமைச்சரவையில் உள்ள தமிழ், முஸ்லிம்கள், அமைச்சர்கள் அதற்கான அங்கிகாரத்தை வழங்கியிருக்க வேண்டும். அதனைவிடுத்து, அங்கிகாரத்தினை வழங்கிவிட்டு வர்த்தமானியில் அவசரமாக பிரசுரிப்பது அநியாயம் என்று குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது சிறுபான்மையினரை ஏமாற்றும் செயலாகும்.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக ரவூப் ஹக்கீம் பல தடவைகள் சுட்டிக் காட்டியுள்ளார். அவற்றினை தீர்க்காது போனால் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றும் அவர் சூளுரைத்திருந்தார். ஆனால், தற்போது எல்லை நிர்ணயத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளையும், பிரச்சினைகளையும் கருத்திற் கொள்ளாது நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி மன்றங்களில் வெகுவாகக் குறைவடைந்துவிடும். இதனால், முஸ்லிம் பிரதேசங்கள் மிகப் பெரிய பாதிப்புக்களை எதிர் கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
ஒரு பிரதேசத்தில் உள்ள இனவிகிதாசாரம், நிலத் தொடர்புகள் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பெரும்பான்மையினம் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வட்டாரங்களின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்த வரை திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், மூதூர் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அப்பிரதேச முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். இங்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில் எல்லைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகர சபை மற்றும் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை, ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை, சிலாபம் நகர சபை மற்றும் பிரதேச சபை, நாத்தாண்டியா பிரதேச சபை ஆகியவற்றிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய வேண்டுமென்பதற்காக திட்டமிட்ட வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேச சபை, பாத்தஹேவஹட்டை பிரதேச சபை, பாத்ததும்பறை பிரதேச சபைகளிலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது போன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு சதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றிக்குரிய தீர்வுகளை அரசாங்கம் முன் வைக்காத நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயத்தினை அமுல்படுத்த நடவடிக்கைகளை எடுப்பது முஸ்லிம்களின் மீது வேண்டுமென்று மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையாகவே இருக்கின்றது. இதனால், முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இவற்றில் போதிய கவனம் செலுத்துதல் வேண்டும். இன்று விடும் தவறு முஸ்லிம்களின் எதிர்காலத்தை அலங்கோலப்படுத்திவிடும்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதில் அரசியல் கட்சிகளினதும், கட்சிகளின் பிரதிநிதிகளினதும் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது அரசியல் எதிரி அல்லது கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காக எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1981ஆம் ஆண்டிற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார அடிப்படையிலேயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் ஒன்று கூடி தமது உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர், துணைத்தலைவர்களை தெரிவு செய்யும் முறை இருந்து வந்துள்ளது. இத்தேர்தல் முறை 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் அதிகார சபையின் சட்டத்தினால் மாற்றியமைக்கப்பட்டது. இதன் பின்னர் விகிதாசார அடிப்படையிலேயே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். தற்போது அரசாங்கத்தினால் முன் வைக்கப்படவுள்ள உள்ளுராட்சி தேர்தல் முறையானது 1981ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த வட்டார முறையையும், 1989ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விகிதாசார முறையையும் கலப்பாகக் கொண்டதொரு தேர்தல் முறையை அறிமுகம் செய்யவுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களினதும், பொதுத் தேர்தல் முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் சட்ட மூலம் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலை வட்டார முறைப்படி நடாத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. இம்முறையில் 70வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் போது சிறுபான்மைக் கட்சிகள் தங்களது இனங்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்று சுட்டிக் காட்டின. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன்அலி 60 வீதம் வட்டார அடிப்படையிலும், 40 வீதம் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதனை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால், தற்போதைய அரசாங்கம் 70இற்கு 30 என்ற அடிப்படையில்தான் உறுப்பினர்களை தெரிவு செய்யவுள்ளது. இதனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து போகும் வகையில் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் பிரதேசங்கள் பெரும்பான்மை சிங்கள பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம்களினால் அந்தகைய வட்டாரங்களின் தமது பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும்.
மொத்த ஆசன ஒதுக்கீட்டில் 25 வீதம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். உள்ளுராட்சி மன்றமொன்றின் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி ஒன்று 5 ஆயிரம் ரூபாவும் , சுயேட்சைக் குழு 20ஆயிரம் ரூபாவும் செலுத்துதல் வேண்டும். 05வீத வெட்டுப் புள்ளியும் நடைமுறையில் இருக்குமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மிகவும் குறைவாகும். அரசாங்கம் உள்ளுராட்சி சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை கொண்டுள்ளன. இதனால், உள்ளுராட்சி சபைகள் பொது நலன்கள் சார்ந்த துறைகளில் குறிப்பாக பொதுச் சுகாதாரம், கழிவகற்றல் போன்ற கருமங்களை செய்து கொண்டு வந்தள்ளன. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு நிறைவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கு நாடுகளில் உள்ள உள்ளுராட்சி மன்றங்கள் முழுமையான சுயாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அங்குள்ள உள்ளுராட்சி அமைப்புகள் தமது பிரதேசத்திற்குரிய கல்வி, காவல்துறை, சமூக சேவைகள் என்பவற்றில் அதிகாரங்களைக்; கொண்டுள்ளன. இதனால், அங்குள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் மக்களுக்கு பல அபிவிருத்திகளைச் செய்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு இலங்கையிலும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதனால், பொது மக்கள் தமது பல தேவைகளை உள்ளுராட்சி சபைகளின் மூலமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
– ஷஹாப்தீன் –

No comments:
Post a Comment