வட மாகாண முஸ்லிம்கள் தொடர்பான முசலி மக்கள் பிரகடனம்!!!

வட மாகாண முஸ்லிம்கள் தொடர்பான முசலி மக்கள் பிரகடனம்!!!
முகுசீன் றயீசுத்தீன்

பிரகடனத்துக்கான நியாயம்
இலங்கை இனப்பிரச்சினை ஆயுத மோதலாக இடம்பெற்றிருந்த காலப்பகுதியில் 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கடைசிப் பத்தில் வட மாகாணத்தில் பெரும்பான்மைத் தமிழர்கள் மத்தியில் அதிக இடங்களில் மிக ஐதாகவும் முசலிப் பிரதேசம், எருக்கலம்பிட்டி போன்ற இடங்களில் அதிகளவு செறிவாகவும் வாழ்ந்து வந்த சுமார் 7 வீத முஸ்லிம்கள் (சுமார் 75,000 பேர்) தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் வட மாகாண முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை என்பன கேள்விக்குறியானதுடன் அது குறித்த அக்கறை அவசியமாகியது.
இடம்பெயர் வாழ்க்கை
வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் புத்தளம் மாவட்டத்தில் அதிக செறிவாக நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஒரு தொகையினர் குருநாகல், அநுராதபுரம், கொழும்பு ஆகிய இடங்களில் அகதி முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் வாழத் தொடங்கினர். இதனால் மிகவும் பின்தங்கிய வாழ்க்கை, பொருளாதார நெருக்கடி, உளவியல் பாதிப்பு, சமூகப் புறக்கணிப்பு மற்றும் அதிக நிருவாகப் பாரபட்சம் என்பவற்றிற்கு உள்ளாகியிருந்தனர்.
மீள்குடியேற்றம்
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் வட மாகாண முஸ்லிம்கள் தாமாக தமது சொந்த இடங்களுக்குச் சென்று மீள்குடியேறத் தொடங்கினர். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமது அழிவடைந்த வீடுகள், காடடர்ந்து அடையாளந் தெரியாத காணிகள், இரட்டிப்பாகிய மக்கள் தொகைக்கேற்ப காணிகள் இல்லாமை, நிருவாக ரீதியான கிராம எல்லைகளின் மாற்றங்கள், புதிய சமூகப் பிரிவினருடனான தொடர்புகள் என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தனர்.
மேலும் அரசியல் தரப்பினரின் விருப்பு வெறுப்புகள், தமிழ் பெரும்பான்மையான அரச அதிகாரிகள் மற்றும் வட மாகாண சபையின் புறக்கணிப்பு, சாதாரண பொது மக்களுக்கு இறுக்கமானதும் அரசியல் அதிகாரப் பிரிவினர் மற்றும் இலஞ்சம் வழங்குநர்களுக்கு இலகுவானதுமான சட்ட நடைமுறை, ஜனநாயகத்தின் வீழ்ச்சி நிலை போன்ற பல்வேறு காரணிகளால் மீள்குடியேற்றம் வெற்றியளிக்கவில்லை.
தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ், முஸ்லிம் அரசியல் தரப்பினரின் இனவாத அரசியல் நகர்வுகள், திட்டமிடப்படாத மீள்குடியேற்றம், மந்தகதியான அபிவிருத்தியும் மீள்குடியேற்ற உதவியும், கல்வி – சுகாதாரம் – நீர்வசதி – பாதை போன்ற அடிப்படை வசதிகளின் பின்னடைவு என்பனவற்றாலும் இன்னும் பெரும்பகுதி வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற முடியாமல் தென்னிலங்கையில் தாமதிக்கின்றனர். இதனால் சிலர் தென்னிலங்கையிலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடி
வட மாகாணத்தில் தற்போது மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் சிலரின் பூர்வீகக் காணிகள் பிறருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகரித்த முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய காணிகளை அடையாளப்படுத்துவதில் தமிழ் அரச அதிகாரிகள், வட மாகாண சபை, தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள், தென்னிலங்கையின் கடும்போக்கு பௌத்த சக்திகள் பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றனர். இதனால் இம்முஸ்லிம்களின் காணி விவகாரங்கள் பொலிஸ் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் நோக்கி நகர்த்தப்பட்டு பணம், காலம், கௌரவம் சீரழிவுக்குள்ளாக்கப்படுகின்றன.
குறிப்பாக வன்னி முஸ்லிம்கள் மத்தியில் பலம் வாய்ந்த சிவில் அமைப்புகள் இல்லை. அவ்விதமான சிவில் அமைப்புகள் தோற்றம் பெறுவதை முஸ்லிம் அரசியல் அதிகாரத் தரப்பினர் விரும்புவதுமில்லை. அதனால் இம்மக்களுடைய பிரச்சினைகள் அரசியல் காரணங்களுக்காக மூடி மறைக்கப்படுவதுடன் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளையும் சவால்களையும் இம்மக்கள் சந்தித்து வருகின்றனர்.
முசலி மக்கள் பிரகடனம்
வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் நிறைவடையும் இவ்வேளையில் முசலி மக்கள் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் வட மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகள் தொடர்பான ‘முசலி மக்கள் பிரகடனம்’ ஒன்றை வெளியிடுகின்றனர்.
1. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேறற்றம் கௌரவமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. புத்தளம் – மன்னார் வீதி 24 மணி நேரமும் திறக்கப்பட வேண்டும்.
3. சிலாவத்துறை மற்றும் மறிச்சுக்கட்டி ஆகிய முஸ்லிம் கிராமக் குடியிருப்புகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அங்கிருந்து வேறு இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.
4. வட மாகாண சபையின் சகல நடவடிக்கைகளின் போதும் வடக்கு முஸ்லிம்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
5. வட மாகாணத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முசலி பிரதேசத்தின் பிரதான நிறுவனத் தலைவர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும்.
6. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டிருந்த காலத்தில் முசலிப் பிரதேசத்தில் மாற்றியமைக்கப்பட்ட கிராம சேவையாளர் எல்லைகள், பிரிவுப் பெயர்கள் மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
7. முசலிப் பிரதேசத்தின் மக்கள் குடியிருப்புப் பகுதியை காடாக அடையாளப்படுத்திய 2012 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட வேண்டும்.
8. வட மாகாணத்தின் அனைத்து முஸ்லிம் குடும்பங்களுக்கும் பொலிஸ் பதிவின்றி முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.
9. உடனடியாக மீள்குடியேற முன்வராமல் தென்னிலங்கையில் வாழும் வடக்கு முஸ்லிம்கள் தாமாக விரும்பி மீள்குடியேறும் வரை அவர்களின் நல உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
10. இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும் போது வடக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
11. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது வடக்கு முஸ்லிம்கள் மீண்டுமொரு பலவந்த வெளியேற்றத்தையோ பாதிப்பையோ எதிர்நோக்காத வகையில் யாப்பு ரீதியான நிலைத்திருத்தல் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும்.
12. வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து விசாரணை செய்ய ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Pages