நிரந்தர குடியிருப்புகளின்றி அல்லற்படும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள்
ஹொரணை நகரை சுத்திகரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் ஹொரணை நகர சபையைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நிரந்தர குடியிருப்பு, குடிநீர், மலசலகூடவசதி மற்றும் பாதை வசதியின்றி பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
ஹொரணை – மத்துகம வீதியில் ஹொர ணை நகருக்கு அருகே அமைந்துள்ள நகர சபைக்குச் சொந்தமான ரோஸ்வூட் என்ற காட்டுப் பிரதேச காணியிலேயே தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வரும் நிலை யில், இவர்களின் வாழ்க்கை நிலை குறித்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்று வரையில் இவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்களை அமைத்துக் கொடுக்கவும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படு த்திக் கொடுக்கவும் முன்வராமை குறித்து இந்த மக்களும் பிரதேசவாசிகளும் மிகுந்த அதிருப்தியும் விசனமும் தெரிவித்துள்ளனர்.
குப்பைக் கூளங்கள், வீடுகளில் சேரும் கழிவுகள் இவற்றை கொட்டுவதற்கான இட வசதியின்மை, கழிவுநீர் மற்றும் மழை நீர் வழிந்தோடக் கூடிய வடிகான் வசதியின்மை போன்ற காரணங்களால் கழிவுகளும் கழிவுநீரும் ஆங்காங்கு தேங்கிய நிலையில் காணப்படுவதால் ஈ, நுளம்பு என்பன பெருகி நோய்கள் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது.
நகரசபையினால் மின்சார வசதியும் மூன்று குடிநீர்க் குழாய்கள் மட்டுமே இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் வீட்டுத் தேவைகளுக்கும் இந்தக் குழாய் நீரையே பயன்படுத்தி வருகின்ற போதிலும் இது இங்கு வசித்து வரும் அனைவரினதும் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் போதுமானதாக இல்லை.
அவரவர் முயற்சியில் சிலர் பலகை மற்றும் தகரத்தினாலான மலசல கூடங்களை அமைத்துள்ளனர். பாதை வசதியில்லாத காரணத்தால் தனியார் காணியின் ஊடாகவே போக்குவரத்துச் செய்து வருகின்றனர்.
சிறுவர் முதல் பெரியோர் வரை பலரும் பெரும் சிரமத்துக்கு மத்தியில் அருகருகே ஒழுங்கற்ற முறையில் தகரம், பலகை இவற்றினால் அமைத்துக் கொண்டுள்ள குடிசைகளிலேயே வசித்து வருகின்றனர்.
இத்தனை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இவர்களின் இந்த அவல நிலைக் குத் தீர்வு கிட்டாத போது தற்போதைய நல்லாட்சியிலாவது ஒரு விடிவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
No comments:
Post a Comment